பாலமேட்டில் 09-02-2017 நடந்த ஜல்லிக்கட்டை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். காளைகள் முட்டியதில் 46 பேர் காயமடைந்தனர். காளைகளை அடக்கி திறமை காட்டிய 5 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. மதுரை கலெக்டர் வீரராகவராவ் காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார். முதலில் மஞ்சமலை சுவாமிக்கு சொந்தமான காளை, தொடர்ந்து பாலமேடை சேர்ந்த 5 கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இதன் பின்னர் காளைகள் அடுத்தடுத்து சீறி பாய்ந்தன. ஒரு மணிநேரத்துக்கு 100 இளைஞர்கள் என குழுக்களாக பிரித்து, காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்.
மொத்தம் 789 காளைகள், 1,465 ‘காளையர்’ களமிறங்க அனுமதி வழங்கப்பட்டது. மாலை 4 மணியுடன் ஜல்லிக்கட்டு நிறைவடைந்ததால், 345 காளைகள் மட்டுமே வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. நேரமின்மையால் 444 காளைகள் அவிழ்க்கப்படவில்லை. ஜல்லிக்கட்டின்போது காளைகள் முட்டியதில் பார்வையாளர்களான சரந்தாங்கி கண்ணன் (20), தஞ்சை தமிழ் பல்கலை மாணவர் கெவின் (21) மற்றும் மாடு பிடி வீரரான சோழவந்தான் ராஜேந்திரன் (26) உட்பட 46 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் கெவின் உள்ளிட்ட 6 பேர் கூடுதல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களாக கருப்பண்ணன், சிவக்குமார், செந்தில், பிரபாகரன், சிலம்பரசன் ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டு, பாராட்டுச்சான்றிதழ், நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 9 காளைகள் பிடித்த அரிட்டாபட்டி கருப்பணன் (24), விழாக்குழுவினரின் அறிவிப்பை ஏற்று அடக்க முடியாத ஒரு காளையை விரட்டி பிடித்து அடக்கிய, மதுரை விராட்டிபத்து அன்புசிவா (25) ஆகிய 2 பேருக்கும் தலா ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல் காளை உரிமையாளர்கள் சக்குடி ராஜசேகர், சிக்கந்தர்சாவடி அன்பு, பூதகுடி அய்யாத்துரை, கருப்பாயூரணி செல்வம், உத்தங்குடி கருப்புச்சாமி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர்.
‘விளையாட்டு காட்டிய காளைகள்’
* வீடுகளின் மாடிகள், பால்கனி மற்றும் புளியமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களில் ஏறி நின்றபடி பார்வையாளர்கள் போட்டிகளை கண்டு களித்தனர். 6 கோயில் காளைகளைத் தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளில் முதல் 3 காளைகள் யாரிடமும் பிடிபடவில்லை. நான்காவது காளையே வீரர்களிடம் பிடிபட்டது. பூலாம்பட்டி துரைப்பாண்டி, பாலமேடு ராஜேந்திரன் ஆகியோரது காளைகள் வீரர்களிடம் வெகுநேரம் விளையாட்டு காட்டின.
* பரிசுகளாக 2 புல்லட்கள் உள்ளிட்ட 3 மோட்டார் சைக்கிள்கள், தங்கம், வெள்ளி நாணயங்கள், அண்டா, பீரோ, கட்டில், கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் வாடிவாசல் அருகில் குவித்து வைக்கப்பட்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
* மதுரை மாவட்ட கால்நடைத்துறை மண்ட இணை இயக்குநர் பாலச்சந்திரன் தலைமையில், 10 குழுக்களின் கால்நடை மருத்துவர்கள் காளைகளுக்கு காலை 7 மணி முதல் மருத்துவ பரிசோதனை செய்தனர். டாக்டர் வளர்மதி தலைமையில் 16 மருத்துவக் குழுவின் 200 டாக்டர்கள், பணியாளர்கள் வீரர்களுக்கு உடல்திறன் சோதனை நடத்தினர். 8 ஆம்புலன்ஸ்கள், 2 கால்நடை ஆம்புலன்ஸ்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
* மதுரை மாவட்ட எஸ்பி (பொறுப்பு) சக்திவேல், விருதுநகர் எஸ்பி ராஜராஜன், கன்னியாகுமரி எஸ்பி தர்மராஜன் ஆகியோர் தலைமையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாணவர்களுக்கு மரியாதை
ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி, பெற்றுத்தந்த மாணவர்கள், இளைஞர்களுக்கு பாலமேட்டில் தனி கேலரி அமைக்கப்பட்டிருந்தது. 500 இருக்கைகளில் மாணவர்கள், இளைஞர்கள் அமர்த்தப்பட்டனர். சென்னை, கோவை, தஞ்சை, சிதம்பரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் 17 பகுதிகளில் இருந்து வந்திருந்த இவர்களுக்கு ஏற்கனவே ஜல்லிக்கட்டு அனுமதி அட்டை வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் அந்த அட்டையை ‘பேட்ஜ்’ போன்று, சட்டையில் குத்திக்கொண்டனர்.
புகைப்படங்காள் yamo.moya








































Wow....photos semma brother
ReplyDeletethank you bro
ReplyDelete