Saturday, February 11, 2017

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2017 Alanganallur Jallikattu 2017



உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2 ஆண்டுகளுக்குப்பிறகு நேற்று நடந்தது. வாடிவாசலில் இருந்து புயலெனச் சீறிய காளைகளை, காளையர்கள் துரத்திப் பிடித்து அடக்கிச் சிலிர்க்க வைத்தனர். மதுரை மாவட்டத்தில் தை முதல் நாளான பொங்கலன்று அவனியாபுரம், மாட்டுப்பொங்கலன்று பாலமேடு, மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது வழக்கம். உச்சநீதிமன்ற தடையால், கடந்த 2 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. அவசரச் சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து, பிப். 5ல் அவனியாபுரம், நேற்று முன்தினம் பாலமேடு, நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடந்தது.

போட்டியில், 549 காளைகள் மற்றும் 1,050 வீரர்கள் களமிறங்க அனுமதி தரப்பட்டது. நேற்று காலை 8 மணிக்கு போட்டியை கலெக்டர் வீரராகராவ் துவக்கி வைத்தார். முதலில் கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. முரட்டுக்காளைகளில் சில பிடிபடாமல், களத்தில் நின்று ஆடி வீரர்களை கலங்கடித்து, உரிமையாளர்களுக்கு பரிசுகளைக் குவித்தன. 

 ‘பாய்ந்து வந்த’ காளைகளின் திமிலை பிடித்து எல்லைக்கோட்டை கடந்து வீரர்களும் பரிசுகளை குவித்தனர். காளைகள் முட்டியதில் 73 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. 23 பேர் மட்டும், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை எஸ்பி சக்திவேல் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். வாடிவாசலில் இருந்து, எல்லைக்கோடு வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை விழா கமிட்டியினர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும் வரவேற்று, மேடையில் அமர வைத்தனர். பார்வையாளர்களுடன் இவர்களும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசித்தனர்.

 மாலை 4.45 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. புதுக்கோட்டையில் தடியடி: புதுக்கோட்டை அருகே உள்ள மலைக்கோயிலில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. பெரும்பாலான மாடுபிடிவீரர்கள், வாடிவாசல் பகுதியில் நின்றதால், காளைகள் வெளியேறியவுடன் மீண்டும் வாடிவாசலுக்குள் திரும்பி ஓடின. உள்ளே, காளைகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு கொண்டன. இதைத்தொடர்ந்து, வாடிவாசலில் இருந்தவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர். 

ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால், போலீசார் மற்றும் விழா கமிட்டியினர் அவர்களை அடித்து விரட்டினர். இதன்காரணமாக ஒரு மணி நேரம் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. இதேபோல், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியிலும் ஜல்லிகட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் 200 காளைகள், 100 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. போட்டியில், 2 பேர் காயமடைந்தனர். 

மேன் ஆப் த ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்களில் அலங்காநல்லூர் அருகே பண்ணைக்குடி விமல்ராஜ் 13 காளைகளை அடக்கினார். தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, கிரைண்டர்உள்ளிட்ட பல்வேறு பரிசுகளைப் பெற்றார். இவர் ‘மேன் ஆப் த ஜல்லிக்கட்டு’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட நிர்வாகத்தின் பாராட்டுச் சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. விழாக்குழு சார்பில் இவருக்கு ஒரு புல்லட் மோட்டார் சைக்கிளும், ஒரு நாட்டு பசுவும் பரிசாக வழங்கப்பட்டது. 

காரை தட்டிச்சென்ற இலங்கை அமைச்சர்

ஜல்லிக்கட்டில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு சொந்தமான காளைக்கு முதல் பரிசாக கார், நாட்டுப் பசுமாடு வழங்கப்பட்டது. 2வது பரிசாக மதுரை சக்குடி  ராஜசேகரின் காளைக்கு மினி டிராக்டர் உழவு வாகனமும், மதுரை ஆனையூர் பெருமாள், அவனியாபுரம் சுப்புராஜ், மேலூர் லட்சுமி ஆகியோரது காளைகளுக்கு சிறப்புப்பரிசாக தலா ஒரு புல்லட் மோட்டார் சைக்கிளும் வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் தனது குடும்பத்தினருடன் வந்து ஜல்லிக்கட்டை க கண்டு ரசித்தார். '


































































































நன்றி 


இப்படிக்கு உங்கள் யாமொ.மொயா +919788746460